வண்ணங்களாய் ஒளிர்ந்த அவனது பகலில்
விழுந்தது அந்த கொடிய இரவின் நஞ்சு.
தாயை பிரிந்த மழலையாய்
தன் சூரியனை இழந்து அழுகலானான்.
மின்மினிகளாய்,
அங்கும் இங்கும் என ஆறுதல் கூறிய
நட்சத்திரங்களையும் விழுங்கின
அந்த கோர இரவின் கருமேகங்கள்.
தன் பார்வை பறிபோனதோ
என்று அவன் அச்சம் கொள்ளுமளவிற்கு
இருள் பிரகாசிக்கச் செய்து
அவன் அக ஒளியை
கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தது
காலத்தை உறைய வைத்த அந்த இரவு.
இருள் உலகில் மூழ்கிய அவனைக் காக்க
சூரியனாய் உதித்தது நிலவு.
இடிந்து நொறுங்கிய அவன் பகலை
தனியாய்த் தாங்கிப் பிடித்து நின்றது.
அந்த இரவின் கோரத்தை
மெல்ல மெல்ல தன் ஒளிக்கீற்றால் துரத்தி
தன் வடுக்களை மறைத்து
ஓர் பக்கத்தை மட்டும் காட்டி நின்றது
அந்த நிலவு.
பிறரின் வாழ்வில் இருளைப் போக்கும் அந்த நிலவு
தான் தினமும் தேய்வதையும்
தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்வதையும்
ஏனோ அவனிடமிருந்து மறைத்து
ஆறுதல் கூறியது.
– பிரதீப்
மேற்கோள் :
படம் : https://unsplash.com/search/photos/moon
விளக்கம் :
மேற்கு வானில் சூரியன் மறைந்து வானம் இருள்வது, இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது, சந்திரனின் ஓர் பக்கம் மட்டும் உலகிற்கு தெரிவது, சந்திரன் மாதம் தோறும் தேய்ந்து ஒளிர்வது போன்றவை இயற்கை நிகழ்வுகள்.
வாழ்வில் ஒளிக்காட்டிய ஒருவரின் மறைவு அந்த இருளிற்கு சமமானது. எத்தனை நட்சத்திரங்கள் ஆறுதல் கூறினாலும் அந்த ஒளிக்கு ஈடாகாது. அந்த இழப்பை குறைக்கும் வலிமை நிலவிற்கு மட்டும் உண்டு. யாரும் அறியா காயங்களை தன்னுள் மறைத்து கொண்டு ஆறுதல் கூறி ஒளிரும் வல்லமை உடையது அந்த நிலவு.